கிழவனும் கடலும் | எர்னெஸ்ட் ஹெமிங்வே | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : கிழவனும் கடலும்
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
மொழிபெயர்ப்பாளர் : எம். எஸ் (எம். சிவசுப்ரமணியன்)
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 104

இயற்கைக்கும் மனிதனுக்கும் ஆன போராட்டமாகவோ, கடல் சார்ந்த கதையாகவோ இப்புதினத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் மனப்போராட்டங்களை மட்டுமே இக்கதையில் என்னால் காண முடிந்தது.

‘எதையும் யோசிக்காதே’ என்று தொடங்கும் ஒரு பத்தி. அடுத்த பத்தி ‘நான் சிந்திக்க வேண்டும்’ எனத் தொடங்கும். அடுத்த பக்கத்தில் ‘நிறைய யோசிக்கிறாய்’ என ஒரு வரி வரும். இதுபோல நிறைய இடங்களில் முரண்கள் இருந்தன. இப்புத்தகம் படித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் படித்த நேரத்தில் கிடைத்த அதே உணர்வுகளுடன் இப்போது எல்லாவற்றையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.

முரண்கள் சாதாரணமானவை. அதில் நாம் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்பதை பெரும் மனப் போராட்டத்திற்குப் பின் கற்றுக் கொண்டேன். நம் சமுதாயம் நமக்கு கற்றுத் தர மறந்த/மறுத்த விஷயம் இது: முரண்கள் சாதாரணமானவை.

கடைசியில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே படிக்க எஞ்சி இருந்தது. மனதிற்குள் சொல்லிக் கொண்டேன், அந்தத் தாத்தாவிற்கு எதுவும் ஆகி விடக் கூடாது, சோகமான முடிவாக இருக்கக் கூடாது என்று. நல்ல வேலையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் ஆசிரியர் பற்றிய குறிப்பைப் படிக்கையில் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. எர்னெஸ்ட் ஹெமிங்வே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அதுவும் அவரது 62-ஆம் வயதில்.

அதிகம் யோசிக்க கூடியவர்களாகவோ, முரண்களோடு போராடக் கூடியவர்களாகவோ, தங்களைத் தாங்களே குறைவாக மதிப்பீடு செய்து கொண்டு தங்களது முயற்சியையும் வெற்றியையும் கொண்டாட முடியாதவர்களாகவோ உள்ளவர்கள் இப்புத்தகத்தை நிச்சயம் வாசிக்க வேண்டும். தனிமை விரும்பிகள், தனியாய் பேசுபவர்கள் கூட இப்புதினம் வாசிக்க வேண்டும். ஆரோக்கியமான மனநிலை, அமைதியான மனது எவ்வளவு முக்கியமானது இல்லையா.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started