காச்சர் கோச்சர் | விவேக் ஷான்பாக் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : காச்சர் கோச்சர்
ஆசிரியர் : விவேக் ஷான்பாக்
மொழிபெயர்ப்பு : கே. நல்லதம்பி
பக்கங்கள் : 103
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

ஏன் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டும்?
1) வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய வாழ்க்கை முறையில் சற்று நின்று கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தல் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. ஆனால் இப்புத்தகம் உங்களைக் கடந்த காலத்திற்குக் கூட்டிச் செல்லும். நல்லதோ கெட்டதோ இப்புத்தகத்தில் இல்லாத சில அனுபவங்களையும் சேர்த்து அசை போட வைக்கும்.
2) பிரம்மாண்டம் இல்லை. அதீத கற்பனை இல்லை. சாதாரணமாய் வீட்டில் நிகழும் நிகழ்வுகள் போலவே கதை நகரும். போரோ, பெரும் சண்டையோ ஏதும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் படிக்கையில் சிறு இறுக்கமான பதற்றமான மனநிலையில் வைத்திருந்தது. வார்த்தைகளும் சில நேரங்களில் மௌனங்களும் உறவுகளை எந்த அளவிற்கு கோரமாய் அழுந்தப் பிடித்து மூச்சடைக்க வைக்கின்றன என்பதை இப்புத்தகத்தில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் பெரும்பாலும் அனுபவங்கள் மூலமே இப்புத்தகத்தை எழுதியிருப்பார் என்று தோன்றியது. அல்லது நல்ல ஆய்வு செய்து எழுதி இருக்கலாம். உதாரணத்திற்கு வாடகை வீட்டில் இருந்த எறும்புகள், காலி செய்கையில் முதல்முறையாக செருப்புக் காலுடன் வீட்டில் நடத்தல், காலி செய்து சொந்த வீட்டிற்கு வரும்போது பக்கத்து வீட்டில் விடைபெறுதல், சொந்த வீட்டில் இருந்த சௌகரியம் அதே நேரத்தில் தனித்தனி அறைகளில் விலகிப் போன உறவுகள், பழைய பொருள்கள் புது வீட்டிற்குப் பொருந்தாமல் போதல் என இவற்றையெல்லாம் படிக்கையில் அனுபவம் மூலமே எழுதி இருப்பார் போல என்றே தோன்றியது. உணர்ந்தவர் மட்டுமே அறிவர்.

அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் lower middle class குடும்பத்தில் உள்ளவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும். உங்களால் நிறைய விஷயங்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.

ஒரு சில இடங்களில் இரண்டு மூன்று முறை படிக்க வேண்டியதாய் இருந்தது. மொழிபெயர்ப்பில் சில திருத்தங்கள் செய்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன். அட்டைப்படம் அருமையிலும் அருமை.

100 பக்கங்கள் உடைய புத்தகத்தில் 5 பக்கங்களில் கூட வின்சென்ட் இடம் பெற்றிருக்கமாட்டான். ஆனால் எனக்கு இப்புத்தகத்தில் பிடித்த கதாபாத்திரம் அவன்தான். நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவோ, அறிவுரை கேட்கவோ யாரோ ஒருவர் நமக்கு தேவைப்படுகிறார்கள். நாம் சொல்லாமலேயே நமது மனநிலையை ஓரளவிற்கு புரிந்து கொள்பவர்கள் உள்ளார்கள். இப்படியான emotional & interpersonal intelligence உடையவர்களில் ஒருவரையாவது சம்பாதித்து விடுவது வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று என்றே கருதுகிறேன். எல்லா சிக்கல்களையும் சரி செய்து வைக்க அல்ல. குறைந்தபட்சம் இக்கட்டான சூழ்நிலைகளில் உடனிருக்க. எனது வாழ்க்கையில் சில வின்சென்ட்கள் உள்ளார்கள். உங்களது வாழ்க்கையில்?

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started