ஓநாய் குலச்சின்னம் | ஜியோங் ரோங் | புத்தகம் – விமர்சனம்

book image

நூல் : ஓநாய் குலச்சின்னம்
ஆசிரியர் : ஜியோங் ரோங்
மொழிபெயர்ப்பு : சி. மோகன்
பக்கம் : 918
வாசிப்பு : Kindle

📍இயற்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் எண்ணற்ற சிக்கலான முறையில் பிணைபட்டிருக்கும் இயற்கையின் கண்ணிகளில், ஒன்றை அறுத்து எறிந்தாலும் அது நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

📍உள் மங்கோலியாவில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் அங்குள்ள நாடோடி மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து உழைக்க சீன மாணவன் ஜென் சென் அனுப்பப்படுகிறான்.
ஒரு ஓநாய் குட்டியை அதீத அன்பினால் அதன் குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு வளர்க்க ஆரம்பிக்கிறான்.

📍ஓநாயே மேய்ச்சல் நிலத்தின் பாதுகாவலர்கள். புல் – மேய்ச்சல் நிலத்தின் முதன்மையான உயிர். மான்கள், எலிகள், அணில்கள் போன்றவற்றின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாப்பதால் ஓநாய் நாடோடிகளின் குலச்சின்னம் ஆக உள்ளது.

📍ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அவ்வளவு தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன. இந்தத் தகவல்களை யாரிடமாவது உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் நிச்சயம் உண்டாகும். ஓநாயின் குணாம்சங்கள், மான் கூட்டத்தினுடனும் குதிரை மந்தையோடும் யுத்தம் நடத்தும் போது அவை மேற்கொள்ளும் திட்டங்கள், கடைப்பிடிக்கும் பொறுமை நிச்சயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

📍ஒரு கட்டத்தில் விவசாயம் செய்யும் மக்கள் நாடோடிகளின் மேய்ச்சல் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கிரார்கள். இறுதியில் அந்த ஓநாய் குட்டி என்ன ஆனது? மேய்ச்சல் நிலம் பாலைவனம் ஆகாமல் தடுக்கப்பட்டதா? ஓநாய் கூட்டத்தின் நிலைமை என்ன ஆனது? நாடோடிகளின் நிலைமை என்ன ஆனது? என்பதை அவசியம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

📍ஏன் இரண்டு கருத்தியல்களுக்கு இடையில் இவ்வளவு மோதல்கள் நிகழ்கின்றன? Win-Win situation-ஐ உருவாக்க இன்றளவும் நாம் பெருமளவில் முயற்சி செய்யாதது ஏன்? ஒரு கூட்டத்தினர் புனிதமானதாக நினைக்கும் ஒன்று இன்னொரு கூட்டத்தினருக்கும் அப்படியானதாகவே இருக்க வேண்டுமா? இதுவரை இப்படி எவ்வளவு இனங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்திருக்கிறோம்?
தேவையான உற்பத்தியோ அறியாமையாலோ பேராசையாலோ செய்யும் அதிக அளவிற்கான உற்பத்தியோ எந்த அளவில் இயற்கையைப் பாதிக்கிறது? அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் அளவிற்கு பூமி கொள்திறன் கொண்டிருக்கிறதா? வளர்ச்சி முக்கியம்தான். ஆனால் அதன் பெயரில் இயற்கையின் கண்ணிகளை தெரிந்தோ தெரியாமலோ அறுத்து எறிகிறோமா?
இப்படி எத்தனையோ கேள்விகள் எனக்குள் தோன்றிக் கொண்டே இருந்தன.
கடைசி அத்தியாயத்தை வாசிக்கையில் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

📍இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும், மொழிபெயர்ப்பு செய்தவர்களுக்கும், இப்புத்தகத்தை பரிந்துரைத்தவர்களுக்கு மிக்க நன்றி.

📍இப்புத்தகம் கட்டாயம் நமது பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். இதுவரை இப்புத்தகம் திரைப்படமாக எடுக்கப்படவில்லை என்றால் நிச்சயம் எடுக்கப்படவேண்டும். இதுவரை நீங்கள் இப்புத்தகத்தை வாசிக்கவில்லை என்றால் அவசியம் வாசிக்க வேண்டும்.

Must read × 1000 times

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started