மொட்டைமாடிக் குருவி

image

‘‘வெள்ளைத் திணை தான் அது சாப்பிடுமாம், ‘உற்சாகத்தில் அண்ணா கொஞ்சம் சத்தமாய்ப் பேசினான். கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொன்னான் இதுதான் சிட்டுக் குருவிகளின் பிரதான உணவு என.

‘எவ்வளவு வெல பாரு? ரொம்ப அதிகமா? எங்க கெடைக்கும்? நாளைக்கே வாங்கிட்டு வந்துரு – கட்டளையிட்டபடி நான்.

அவ்வப்போது கடைகளில் வாங்கி வரும் மிக்சரைக் கொடுத்து காகங்களின் வம்சத்தைக் கெடுத்ததைப் போல சிட்டுக்குருவிகளின் வம்சத்தையும் கெடுக்க விரும்பவில்லை. இதுவே இத்தேடலுக்குக் காரணம்.

பிரதான சாலையில் உள்ள பெரிய கடைகளிலோ, சூப்பர் மார்க்கெட்டிலோ கிடைத்துவிடும். ஏற்கனவே பாலிதீன் பையில் அடைத்துப் பொட்டலம் செய்து வைத்திருப்பார்கள் விலையும் கூட அவ்வளவு அதிகமில்லை. கால் கிலோ 30 ரூபாய் தான்.

எங்கள் வீட்டில் முதலில் குடியேறியது இந்தச் சிட்டுக்குருவிகள் தான் – அதுவும் வீடு பாதி கட்டிய நிலையில் இருக்கும்போதே. நாங்கள் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடியேறி இருந்தோம். சிட்டுக்குருவிகளும் சில வாரங்களிலேயே அது தங்கியிருந்த முள் மரம் வெட்டப்பட்டதால் இரண்டு வீடு தள்ளியிருக்கும் மருதாணிச் செடியில் குடிபுகுந்தன. இடம் மாறுதல்கள் சிலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு வேதனை. இதில் இவை எந்த ரகம் எனத் தெரியவில்லை.

காலையில் மொட்டைமாடியில் உள்ள பூந்தொட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய பின் எப்போதும் கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். இதற்கு முன் இவ்வளவு குருவிகளை ஒன்றாய்ப் பார்த்ததில்லை. சர் சர்ரென்று கூட்டம் கூட்டமாய் ஒவ்வொரு மாடியிலும், மரத்திலும் அமர்வதும் பறப்பதுமாய் இருக்கும். தனியே அலையும் குருவிகளும் உண்டு.

அடுத்த நாள் திணையை ஒரு டீ க்ளாசில் போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனேன். படிகளுக்கு எதிர்ப்புறம் உள்ள மூலையில் வைப்பது என முடிவு செய்தாகிவிட்டது. இடுப்பு வரை எழுப்பியிருந்த தூணில் எல்லாவற்றையும் கொட்டி கொஞ்சம் பரப்பி வைத்தேன். திடீரென ஒரு குருவி பக்கத்தில் இருந்த மின்கம்பி மீது வந்து அமர்ந்தது. பிறகு அதன் கூட்டாளிகளும். நான் நகர்வதற்காகக் காத்திருந்தன. நான் தூரமாய் நடந்து போனதும் தூணில் வந்து அமர்ந்து வேக வேகமாய் டொக் டொக்கென்று சத்தமிட்டபடி சாப்பிட ஆரம்பித்தன. இப்போது 5,10, 20 குருவிகள் வந்து சேர்ந்திருந்தன.

அவை கொத்தித் தின்று போகும் வரை நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். மீதம் வைத்துவிட்டுப் போனது போல தெரிந்ததால் பக்கத்தில் போய்ப் பார்த்தேன். அந்தச் சின்ன சின்ன திணையில் இருந்தும் உமியைப் பிரித்து எடுத்துவிட்டு உள்ளிருக்கும் தானியத்தை மட்டும் சாப்பிட்டிருந்தன. நாம் தயாரிக்கும் செயற்கையான பொருட்களில் மட்டுமல்ல இயற்கையிலும் ஆச்சர்யப்படுவதற்கு எத்தனை எத்தனையோ வனப்புகள், அதிசயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

நூற்றுக்கணக்கில் வௌவால்கள் வலசை போனதைப் பார்த்தது அதுவே முதல் முறை. காலையில் கிழக்கிலிருந்து மேற்காக, மாலையில் மேற்கிலிருந்து கிழக்காக, பள்ளிக்கூடத்திற்குக் குழந்தையை அனுப்பி பிறகு வரவேற்க காத்திருக்கும் அம்மா போல சூரியன் கதிர் பரப்பியிருந்தது.

இரண்டு மூன்று அணில்கள் மின்கம்பிகளில் வேகமாய் ஓடுவதும் திடீரென நின்று அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு திரும்பவும் ஓடுவதும் வேடிக்கையாய் இருக்கும்.

துணி காயப் போடும் கொடியில் அமர்ந்தபடி தோலை நீக்கிவிட்டு வேர்க்கடலையை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஒரு காகம். உமி நடனம் ஆடியபடி கீழே வந்து விழுந்தது. ஒருவேளை நியூட்டன் இதே போன்ற ஒரு காட்சியைப் பார்த்திருந்தால் புவியீர்ப்பு விசையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிச்சயம் ஓரு கவிதை எழுதியிருந்திருப்பார்.

இந்தக் காட்சிகள் எல்லாம் நகரங்களின் மொட்டை மாடிகளிலும் தெரிவது ஆச்சர்யங்களிலும் மிகு ஆச்சர்யம்.

உணவு வைக்க காலையில் நேரமாய் மாடிக்குப் போகவில்லை என்றால் ‘நீ ஒரு சோம்பேறின்னு அதுகளும் கண்டுபிடிச்சிருக்கும்’ என்பாள் அம்மா. என்றாவது ஒருநாள் உணவு வைக்காமல் இருந்தால் ‘ஏன் நேத்து வரல’ எனக் கேட்கும் பள்ளிக்கூட ஆசிரியர் போல அவையும் கண்டிப்பதாய்த் தோன்றும். சிட்டுக்குருவிகள் தினம் பற்றி அவற்றிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று மட்டும் இரண்டு மடங்கு அதிகமாய்த் திணையைத் தூவி வந்தேன். ஒருவேளை ஏன் என்று புரியாமல் அவை குழம்பியிருக்கலாம்.

மாலையில் கல்லூரி விட்டு வீடு திரும்பும்போது மருதாணிச் செடியைக் கடந்து தான் வர வேண்டும். கிரீச் கிரீச் என ஒரே சத்தமாய் இருக்கும். எங்கோ படித்த ஞாபகம் உண்டு. உணவு கிடைக்கும் இடங்கள், வலசை போகும் இடங்கள், தங்கள் அனுபவங்கள் எல்லாம் பெரிய பறவைகள் குட்டிப் பறவைகளுடன் பகிர்ந்து கொள்ளுமாம். ஆனால் ஏன் பறவைகளின் மொழியைக் காலம் காலமாக சத்தங்கள் என்றே நாம் சொல்லிப் பழகிவிட்டோம்?

வாழ்க்கையில் சில தருணங்கள் நம்மை எப்போதும் போல செயல்பட விடுவதில்லை. சூழ்நிலைகள் நமக்குப் பிடித்ததையும் பிடிக்காததாய் மாற்றி விடுகின்றன. ‘என்ன வாழ்ந்து என்ன பண்ணப் போகிறோம்’ இந்த மனநிலையை பிரச்சனைகள் தவறாமல் ஏற்படுத்தி விடுகின்றன. அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை வெறுப்பான ஒன்றாய் மாற்றி நமது இயக்கங்களை முடக்கிவிடுகின்றன.

அதில் ஒன்றுதான் குருவிகளுக்கு உணவு கொடுக்கத் தவறியதும். சில நாட்களாய் மனசு சரியில்லை. என்னுடைய பிரச்சனைகளுடன் சேர்த்து அவற்றின் பிரச்சனைகளையும் யோசிப்பது சோர்வை ஏற்படுத்தியது. நான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாய் உணர்ந்தேன். நான் தான் அவற்றின் துன்பங்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் எனத் தோன்றியது. தினமும் வந்து தேடியிருக்கும், எனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கும். உணவு கிடைக்காமல் ஏமாந்து போயிருக்கும். ஒருவேளை அன்றைக்குப் பசியோடேயே இருந்திருக்கும்.

எனது உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்திருந்தன. நானும் பறவையாக இருந்திருந்தால் வேகமாய்ச் சிலிர்த்துச் சிறகடித்து தோல் முழுவதும் ஒட்டியிருக்கும் குற்ற உணர்ச்சியை உதிர்க்க முயன்றிருப்பேன். அது சாத்தியமில்லாமல் போனது. உமிகளை எளிதாய்ப் பிரிப்பது போல மனதிலிருந்து உணர்வுகளை அவ்வளவு எளிதாய் நீக்கிவிட முடிவதில்லை.

ஒரு ஐந்தறிவு உயிரினம் எப்படி யோசிக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். என்னை மட்டும் சார்ந்தா அவை பறந்து திரிகின்றன. எங்கள் மாடி மட்டும் தான் அதன் புகழிடமா? இல்லவே இல்லை. இயற்கை அப்படி ஒருபோதும் செயல்படுவதில்லை. ஒற்றைச் சார்பு எங்குமே இல்லை. எந்த உயிரினிடத்தினும் இல்லை. சின்ன அதிர்ச்சியில் வேண்டுமானால் சிக்குண்டிருக்கும். பிறகு வேறு இடங்களுக்கு உணவு தேடப் போயிருக்கும் என என்னை நானே சமாதானப்படுத்தி வைத்தேன்.

பீர்பால் வரைந்த கோடு போல் வாழ்க்கை சில பிரச்சனைகளைப் பெரிதாக்குவதன் மூலம் சில பிரச்சனைகளைச் சிறியதாய், ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாததாய்க் கூட மாற்றிவிடுகிறது.

மூன்று மாதங்கள் கழித்துக் காலங்கள் மாறுவது போல காயங்களும் மாறி இருந்தன. திரும்பவும் அதே இடத்தில் மாடியின் மூலையில் நிற்கிறேன். முந்தைய நாள் மறக்காமல் வாங்கி வந்த திணையுடன். ஆனால் எந்தக் குருவியும் எங்கள் மாடிப் பக்கம் வரவேயில்லை. முதல் தடவை போல உடனே வராமல் இப்போது ஏன் தயங்குகின்றன. திரும்பவும் ஏன் ஒரு ஏமாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். முள் மரத்திலிருந்து மருதாணிச் செடிக்கு மாறியது போல இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை ஏற்கனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். வாழ்தலுக்கான உந்துதலில் அதன் பறத்தல் தடைபடவில்லை.

இரண்டு மூன்று வாரங்கள் ஒடியிருந்தது. தூவப்பட்ட திணைகள் குறையவேயில்லை. காற்றுக்கு அங்கும் இங்குமாய் மட்டும் நகர்ந்திருந்தன. எனக்கு என்ன செய்வதென்றே புலப்படவில்லை. போனால் போகட்டும் என விட்டுவிடுவதா அல்லது தொடர்ந்து முயற்சி செய்வதா? சில கேள்விகளுக்கு என்றுமே தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடிவதேயில்லை. அப்படியே ஏதாவது ஒன்றைச் செயல்படுத்தினாலும் மனம் 100 விழுக்காடு அதை ஏற்றுக்கொள்வதில்லை.

உறவுகள் கண்ணாடி போல, ஒருமுறை விரிசல் விழுந்தால் திரும்பவும் அதை ஒட்ட வைக்க முடியாது. உண்மையில் எனக்குப் புரியவில்லை. இந்தப் பழமொழிகள் எல்லாம் நமக்கு மட்டும்தானா இல்லை ஐந்தறிவு உயிரினங்களுக்கும் பொருந்துமா?

அன்பு, நம்பிக்கை போன்ற உணர்வுகள் சமூகத்தின் அல்லது தனிநபரின் முன்முடிவுகளை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதில்லை. சில சமயங்களில் அவற்றை அசைத்துப் பார்க்கவும் துணிந்துவிடுகின்றன.

இது மார்ச் மாதம். இப்போதே பயங்கரமான வெயில். 10 மணிக்கெல்லாம் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. தீராத தாகம் இருந்து கொண்டே இருக்கிறது. நமக்கே இப்படி என்றால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குடிக்க நீர் கிடைப்பது என்பது மிகவும் கடினம். சின்ன குவளை ஒன்றில் தண்ணீர் நிரப்பி மாடியில் வைத்தால் பேருதவியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒருவேளை தண்ணீரைக் கண்டடையும் நேரத்தில் பக்கத்திலேயே தூவியுள்ள திணையையும் கண்டடையலாம். தூரமாய்த் தள்ளி நிற்கும் என்னையும் கூட. காத்திருக்கிறேன் என்றும் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கும் அன்புடனும், நம்பிக்கையுடனும்.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started