தெய்வம் என்பதோர் | தொ. பரமசிவன் | புத்தக விமர்சனம்

நூல் : தெய்வம் என்பதோர்
ஆசிரியர் : தொ. பரமசிவன்
பக்கம் : 112
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்


இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம். இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப -வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டும் அல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை/சிக்கல்களை இதுவரை அறிந்திராத இன்னொரு கோணத்தில் நின்று புரிந்து கொள்ள முடியும்.

நாட்டார் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் தான் அதிக அளவிலான எண்ணிக்கையில் உள்ளன. ‘பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்று கேட்கும் தெய்வங்களாக இல்லாமல் பெரும்பாலும் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் தரித்த, அரக்கன் தலை கொய்து மக்களை காக்கும் கோபம் கொண்ட தெய்வங்களாகவே உள்ளன. இந்தக் கோயில்கள் பெரும்பாலும் வடக்கு திசை நோக்கி இருக்க காரணம் என்ன? தமிழகம் என்பது பண்டைய காலத்தில் தற்போதைய கேரளத்தையும் உள்ளடக்கியதாகவே இருந்துள்ளது. ஆக பகைவர்கள் வடக்கில் இருந்து மட்டுமே வரமுடியும். எனவேதான் மக்களைக் காக்க வடதிசை நோக்கி தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்தி நிற்கிறது.

பொய் அழுகையை நீலிக்கண்ணீர் என்று சொல்லியும் கேட்டும் இருப்போம். அந்த நீலியின் கதை என்ன? அந்த கதையில் வணிகன் கொலைகாரனாகவும், வேளாளர்கள் சத்தியம் தவறாதவர்களாகவும் காட்டப்பட்டிருப்பது ஏன் என்ற செய்தியைப் படித்தபோது இவ்வளவு தூரம் ஒருவரால் ஆராய்ச்சி நோக்கில் ஒரு நிகழ்வை/கதையை உற்றுநோக்கி விட முடியுமா என்ற ஆச்சரியமே மிகுந்தது. கீழே குறிப்பிட்டுள்ளவற்றை சிறு செய்தியாகவும் விரிவான ஆய்வாகவும் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

1) தாய்த் தெய்வங்கள் (அவற்றின் வகைமை)
2) நீலியின் கதை (ஏன் நீலி தெய்வம் ஆக்கப்படவில்லை)
3) அரசிகளின் பள்ளிப்படைக் கோயில்கள்
4) வள்ளி (வள்ளி முருகனின் இரண்டாம் மனைவி என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தால் கட்டாயம் வாசிக்கவும்) 
5) நயினார் நோன்பு (சித்திரகுப்த வழிபாடு பற்றி)
6) நெல்லையில் தாய்த் தெய்வமாக வழிபடப்படும் இப்போதும் இருக்கும் பகவதி அம்மன் என்ற சமணப்பள்ளி (கோயில்)
7) வள்ளலார் (சைவ சமயத்தின் உள்ளிருக்கும் கருத்தியல் சார்ந்த முரண்கள்/வரலாற்றுச் சிக்கல்கள் மற்றும் சிதம்பரம் கோயில் பற்றி)
8) கண்ணனைப் பாடும் சாதிய படிமுறைகளை வற்புறுத்த ஆழ்வார் பாடல்களுக்கான காரணம் (அதிகாரத்தை விரும்புபவர்கள் இராம அவதாரத்தையே இப்போதும் கொண்டாடுகிறார்கள்)
9) சடங்கியல் தலைமை (தீ வளர்த்து மந்திரம் சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும்)
10) சாதிப் படிநிலையோடு கூடிய தெருக்களின் வரிசை, கோயில் நுழைவு உரிமை, பிடிமண் கோயில்கள்
11) இந்து, இந்திய தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் உருவாகக் காரணம்
12) காலனி ஆட்சியை மேல்சாதியார் எப்போது எதற்காக எதிர்த்தார்கள்
13) பிராமணரல்லாதார் அறிக்கை, இந்து என்ற சொல்லை நிராகரிக்கும் பெரியாரியம்
எனப் பல கருத்துக்களை தெரிந்து கொள்ள கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். ஒருமுறை, இருமுறை அல்ல திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமே தொ.ப -வின் புத்தகத்தில் உள்ள பல்வேறு தகவல்களை உள்வாங்க முடியும். 

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started