பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள் முருகன் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
ஆசிரியர் : பெருமாள் முருகன்
பக்கங்கள் : 144
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

ஏழு குட்டிகளை ஈனும் அதிசய வெள்ளாட்டுக் குட்டி – பூனாட்சி. இக்கதையில் வரும் தாத்தாவும் பாட்டியும் இவளை வளர்க்கிறார்கள். பூனாச்சி இவர்களிடம் எப்படி வந்து சேர்ந்தாள், இவர்கள் அவளை வளர்த்த விதம், பருவம் வந்ததும் ஆண் வெள்ளாட்டோடு சேர்தல், ஒரு வெள்ளாட்டின் மீது ஏற்படும் ஈர்ப்பு/காதல், மூன்று முறை சினையாதல், மழை பெய்யாமல் ஏற்பட்ட வறட்சி, கடைசியில் பூனாச்சிக்கும் அதன் குட்டிகளுக்கும் என்ன ஆனது என்பதே கதை.

கதைக்கு ஊடேயே அரசாங்கத்தின் மோசமான நடைமுறைகளையும், பேட்டி எடுக்கிறோம் என்று பெயரில் பத்திரிக்கையாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் விமர்சித்திருப்பார்.

புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும். ஆடுகளுக்கு ஒடை அடிக்க வந்தவர், வந்த வேலை முடிந்ததும் அழுது கொண்டே செல்வார். இதனைப் படிக்கையில் என்னமோ போல இருந்தது.  நாய் பூனைகளை பிரியத்துடன் வளர்க்கும் தோழி ஒருத்தியிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வீட்டு விலங்குகளுக்கு Neutering செய்வதன் அவசியம் குறித்துச் சொன்னாள்.

பூனாச்சியின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்று சில இடங்களில் எழுதி இருப்பார். அவற்றை படிக்கையில் இந்த இடத்தில் ஒரு மனிதன் தான் கதாபாத்திரமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

இந்தப் புத்தகத்தில் வரும் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் ஆன உரையாடல்கள், எனக்கு என்னுடைய ஆச்சியையும் தாத்தாவையும் நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன.

இது அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம். குறிப்பாக Pet lovers இதனை நிச்சயம் படிக்க வேண்டும்.

பிடித்த வரிகள்:
1) கையகலச் சீவனின் வயிற்றை நிறைக்க முடியவில்லை என்றால் வாழ்ந்து என்ன பிரயோசனம்?

2) பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னு தான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல எல்லாத்தயும் தின்னர முடியுமா?

3) எத்தனை அழைப்புக் குரல்களையும் புறம் தள்ளி மேலெழுந்து நிற்பது வயிற்றின் குரல்

4) அதிசயம் எப்போதாவது நடப்பது. அடிக்கடி நடந்தால் சாதாரணம்.

5) தூர இருக்கறவங்களுக்கு அதிசயம். பக்கத்துல இருக்கறவங்களுக்குத் தொந்தரவு.

6) இந்த மனசு இருக்குதே அதுக்கு எத்தன குடுத்தாலும் போதாது.

7) இருக்கும்போது ஒழிந்தால் நல்லது என்று தோன்றியதுண்டுதான். அவ்வெண்ணம் உண்மையல்ல. இயலாமையில் வந்தது.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started