சோளகர் தொட்டி | ச. பாலமுருகன் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம்: சோளகர் தொட்டி 
ஆசிரியர்: ச. பாலமுருகன்
பக்கம்: 288
பதிப்பகம்: எதிர் வெளியீடு

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் சோளகர்கள். அவர்களது வாழ்விடமே தொட்டி (ஊர்) என்று அழைக்கப்படுகிறது.
வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் இரு மாநில காவல் துறையினரும் மேற்கொண்ட சிறிதும் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.

சோளகர்களின் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, திருமணம், கடவுள் வழிபாடு போன்றவற்றை புத்தகத்தின் முதல் பாகத்தில் அறிந்து கொள்ள முடியும்.

அருமையான வசனங்களோ, நுட்பமான உரையாடல்களோ, நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கான பாத்திரப்படைப்புகளோ இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் இப்படியானதொரு உறுத்தல் இரண்டாவது பாகத்தைப் படிக்கும் போது தோன்றவே இல்லை.
காரணம், அந்த மக்கள் அனுபவிக்கும் சித்திரவதை மட்டுமே கண்முன் நின்றது. ஒரு உண்மை நிகழ்வினை வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்துவதே இப்புத்தகத்தின் ஒரே நோக்கமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விசாரணை படம் பார்க்கும் பொழுது தோன்றிய பயமும் பதட்டமும் இப்புத்தகத்தை வாசிக்கும் போதும் உருவானது. அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது அனிச்சையாய் கையை எடுத்து வாயை மூடிக்கொள்வோம் அல்லவா, இப்படிப்பட்ட உணர்வினைத் தரும் சம்பவங்கள் தான் இப்புத்தகத்தை நிறைத்திருந்தன. இளகிய மனம் படைத்தவர்களால் இரண்டாவது பாகத்தை எளிதில் படித்து விட முடியாது.

இந்த மனித குலத்தை வெறுப்பதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே தான் போகின்றன. இம்மாதிரியான வெறுப்புணர்வு என் மனதில் வளரும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொள்வது இதைத்தான் – There are more love than hate. இதில் உண்மை இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் இதுதான் என் மனநிலையைச் கொஞ்சம் சீராய் வைத்துக் கொள்ள உதவுகிறது.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started