You can do it!!!

image

🎾ஒரு துறையில் ஆர்வம் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் வெற்றியோ, தொடர் வெற்றிகளோ, வருமானமோ, வாழ்க்கை முறையோ, ஈர்ப்போ, பதவியோ, உயர் நோக்கமுமோ எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
அதென்ன ஈர்ப்பு?
அதுதான் ஒரு துறையில் சிறந்து விளங்கும் நபரைப் பார்த்து அத்துறையில் ஆர்வம் கொள்வது. உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர் போலவோ ஜாக்கிஜான் போலவோ ஸ்ரேயா கோஷல் போலவோ ஆக வேண்டும் என பேராவல் கொள்வது. (சூரியவம்சம் படம் பார்த்து கலெக்டராக ஆசைப்படுதல், கில்லி படத்தைப் பார்த்து கபடி விளையாட ஆசைப்படுதல் ஆகியவையும் இதனுள் அடங்கும்)

🎾அப்படியான பட்டாம்பூச்சி தருணம் என் வாழ்விலும் எட்டிப்பார்த்தது. அவர் வேறு யாரும் இல்லை. டென்னிஸ் புகழ் சானியா மிர்சா!!! அவரது வெற்றிகளும் புகைப்படங்களுமே செய்தித்தாளின் விளையாட்டுப் பக்கத்தை நிரப்பி இருந்தன. இந்த overdose தகவல்களே எனக்கு டென்னிஸ் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாயின.

🎾சும்மா ஒரு ஈர்ப்பு அவ்வளவுதான். அதை நிறைவேற்றிக் கொள்ள நான் ஒரு இம்மி அளவு கூட முயன்றதில்லை. ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு வாய்ப்பு எனது வகுப்பறை தேடி வந்தது. பக்கத்தில் உள்ள கல்லூரியில் இலவசமாக விளையாட்டுப் பயிற்சி அளிக்கிறார்கள் என்று. இவ்வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி டென்னிஸ் மட்டையைக் கையில் பிடித்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது. நானும் பயிற்சிக்குப் போகிறேன் என பி.டி.டீச்சரிடம் அனுமதி வாங்கி விட்டேன். என்னோடு சேர்த்து மொத்தம் 4 பேர். தினமும் மாலை பயிற்சிக்குப் போனோம். கூடைப்பந்து விளையாடக் கற்றுக்கொடுத்தார்கள்.

🎾Warm up என்ற பெயரில் அந்தக் கல்லூரியின் பெரிய வளாகத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நாலு ரவுண்டு ஓடி நாக்கு தள்ளியதையோ, எனது உயரத்தையும் கோல் கம்பத்தின் உயரத்தையும் சென்டி மீட்டரில் ஒப்பிட்டோ நான் இப்போது பேசப் போவதில்லை.

🎾முதல் நாள் அங்கிருந்த பயிற்சியாளரிடம் அறிமுகம் செய்துகொண்டோம். அதற்குப் பிறகு அவரிடம் சொன்னேன்.
‘எனக்கு டென்னிஸ் விளையாடனும் ன்னு ஆசை’
அவர் உடனே அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டார். நானும் பதில் சொன்னேன்.
‘டென்னிஸ் ராக்கெட்டோட வெல என்னன்னு தெரியுமா’ என்றார். அதற்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கூடைப்பந்து பயிற்சி என முடிவானது. இதற்கு நடுவே இந்த விளையாட்டு கிளையாட்டு ன்னு எல்லாம் எதுக்கும் போகக்கூடாது என்ற வீட்டாரின் மறுப்புகள், கட்டுப்பாடுகள் வேறு. அடம்பிடித்து தான் பயிற்சிக்குப் போனேன். அதுவும் இரண்டு வார காலத்திற்கு மட்டும்தான் முடிந்தது.

🎾என்னுடைய டென்னிஸ் பயணம் ஆரம்பிக்காமலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இது ஏதோ தோல்வி அடைந்தவர்களின், வாய்ப்பை சரியாய்ப் பயன்படுத்த தெரியாதவர்களின் புலம்பல் போல் உள்ளது அல்லவா? ஆனால் அப்படி இல்லை. ஒருவேளை அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் நான் ஒரு சாம்பியனாகி இருப்பேன் என்று யாராவது சொன்னால் நான் கூட அதை நம்ப மாட்டேன். இன்னும் ஒரு 2 வார காலப் பயிற்சிக்குப் பின் படிப்புதான் முக்கியம் என முடிவு எடுத்து இருந்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால் என்னைப் போலவே எதிர்த்து பேச இயலாத, வீட்டில் இருந்து ஆதரவு கிடைக்காமல் இருக்கும் ஏதோ ஒரு குழந்தை, எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கான ஆற்றலைக் கொண்டதாக வளரலாம். அக்குழந்தையிடம் சொல்லப்படும் can’t என்ற வார்த்தை எம்மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என யோசித்து பார்த்ததால் தான் இந்த நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

🎾எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒரு குழந்தையிடம் ‘உன்னால் முடியாது’ என்று சொல்லப்படும் எதிர்மறையான வாசகம் மங்கிப்போன ஒரு எதிர்காலத்தை நோக்கியே அவர்களை அழைத்துச் செல்லும்.

🎾ஆனால் மற்றவர்கள் மட்டுமல்ல நாமும் கூட நம்மிடம் எதிர்மறையாகவே பல நேரங்களில் பேசிக்கொள்கிறோம். அதுவும் நன்கு யோசிக்கும் அளவிற்கு வயது ஆன பின்பும் கூட. நமக்குப் பிடித்த துறையில், நாம் சாதிக்க நினைக்கும் துறையில் நமது இலக்குகளை அடைய இருக்கும் வழிகளை ‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தை பெரிய பூட்டு போட்டு அடைத்து விடுகிறது. நல்லவேளையாக இதனை திறக்கும் சாவி நம் உள்ளங்கையிலேயே தான் இருக்கிறது. அடைபட்ட பாதைகளில் நாம் பயணப்பட முடியும். அதற்கு start saying ‘I can do it’.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started