ஸ்டெப்பி கதைகள் | மாக்ஸிம் கார்க்கி | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : ஸ்டெப்பி கதைகள்
ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி
தமிழில் : வானதி
வாசிப்பு : Kindle

ஸ்டெப்பி –  பரந்து விரிந்திருக்கும் வறட்சியான நிலப்பரப்பு. இது விவசாயத்திற்கு ஏதுவானது கிடையாது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் அவர்களது சமூக வாழ்வும் குறைவு.
இப்புத்தகம் அவர்களது வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று கதைகள் காதல் சமூகம் மற்றும் கற்பனையை மையமாகக் கொண்டுள்ளன.

மகர் சூத்ரா – முதல் கதை – நாடோடி இனத்தில் தோன்றிய ஒரு காதலைப் பற்றிப் பேசும். அழகும் கர்வமும் துணிவும் கொண்ட ஒரு பெண்ணும், அழகும் வீரமும் கொண்ட சுதந்திரத்தை மிகவும் விரும்பும் ஒரு ஆணும் காதல் கொண்டால் எப்படி இருக்கும்? அதிகாரத்தையும் சக்தியையும் சமநிலையில் வாய்க்கப் பெற்றவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மோதிக்கொண்டால் நேரும் விபரீதம்  எப்படியானதாக இருக்கும்? கடைசியில் இவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை. இதைப் படிக்க படிக்க ஆதித்த கரிகாலனும் நந்தினியும் தான் என் நினைவிற்கு வந்தார்கள். இந்த கதையை ஏற்கனவே வாசித்து இருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் நினைவிற்கு வந்த ஜோடி யார்?

சலிப்பின் காரணமாக – இரண்டாவது கதை – நாம் வாழும் இடம் எப்படி நம் மனதை இயக்குகிறது என்பதற்கு இக்கதை ஒரு நல்ல உதாரணம். சுற்றியும் வெட்டவெளி. மனிதர்கள் அங்கு குறைவு. எல்லா நாட்களும் அவர்களது வாழ்வு ஒரே மாதிரி இயங்குகிறது, எந்த வித்தியாசமும் இல்லாமல். இதுவே அவர்களது சலிப்பான வாழ்விற்கு காரணம். அங்கே ஒரு இரயில் நிலையம் இருக்கிறது. இரயில் அவர்களது வாழ்விடத்தைக் கடந்து செல்லும் நேரம் மட்டுமே அந்த நாளை உயிர்ப்புடன் வைக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் எல்லாம் வெறுமையுடனும் தனிமையுடனுமே அவர்களது வாழ்வு நகர்கிறது. அந்த இரயில் நிலையத்தில் பணிபுரியும் மனிதர்களைச் சுற்றி அமைந்த கதை தான் இது. சலிப்பை உண்டாக்கும் ஒரு வேலையிலோ வாழ்விடத்திலோ அல்லது ஒரு உறவிலோ இருந்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் இந்தக் கதையை உங்களுடன் பொருத்திப் பார்க்க முடியும்.

இறக்க முடியாத மனிதன் –  மூன்றாவது கதை – அளவில்லாத செருக்குடன் மற்றவர்களைத் துன்புறுத்தியபடி வாழும் ஒருவனது கதை. அவனது சுதந்திரமும் மகிழ்ச்சியும் ஒரு நாள் துயரமும் ஏக்கமும்மாய் மாறி விடுகிறது. அதீத மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வலியை, மரணத்தைத் தேட ஆரம்பிக்கிறான். இக்கதை அவ்வளவாக ரசிக்கவில்லை. முதல் இரு கதைகளுக்காக இப்புத்தகத்தை நிச்சயம் வாசிக்கலாம்.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started