சொல் – காட்சி

ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் எனக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அதில் ஒன்று, அந்த நொடியில் நடக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் பத்து மணி நேரத்திற்குப் பிறகு /பத்து நாட்களுக்குப் பிறகு /பத்து வருடங்களுக்குப் பிறகு (I’m not even exaggerating) செய்யப் போகும் வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் திட்டமிட்ட எந்த வேலையும் அந்த நாளின் முடிவில் நடந்திருக்காது. செயல் என்பது நிகழ்காலத்தில் மட்டும்தானே நடக்கும்.

இப்படியான மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதை எப்படிச் சரி செய்வது என்று யோசிக்கும் போது இரண்டு ஆயுதங்கள் கிடைத்தன.

ஒன்று – சொல்.
Live in the moment, Just do it, NOW, Just take the next step – இவை திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக் கொண்ட மேற்கோள்கள்.

இரண்டாவது – காட்சி(Visuals).
மூளை, இம்மாதிரியான ஒரு மனநிலையைச் சமாளிக்க – படிக்கட்டு போன்ற ஒரு காட்சியை உருவாக்கி அதனை தேவைப்படும் சமயங்களில் எனக்கு நினைவூட்டிக் கொண்டு இருந்தது. முதல் படியில் ஏறாமல் பத்தாவது படிக்கட்டை அடைய முடியாது. நூறாவது படிக்கட்டோ தெளிவாகத் தெரியாது. ஆயிரமாவது நம் பார்வையிலேயே படாது.

சொல்லும், காட்சியும் மனதை நிகழ்காலத்தில் வைக்க போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்த இரு ஆயுதங்களையும் எல்லா நேரங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. அதேசமயம் உடனடியாகவும் பலன் அளிப்பதில்லை.

ஒரு சொல்லுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே அளவு சக்தி ஒரு காட்சிக்கும் இருக்கிறது. இதனைப் பகிர்வதற்கு ஒரு முக்கிய காரணம் –  இப்படியானதொரு காட்சியை நாமே நமது ஆற்றலைச் செலவழித்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. Visual minimalist (சமீபத்தில் கண்டடைந்தேன்) எனச் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருபவர்கள் உள்ளார்கள். அவர்கள் ஒரு கருத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதனை ஒரு எளிமையான காட்சியாக உருவாக்குகிறார்கள். சட்டென நினைவில் வைத்துக் கொள்ளும் படியான தோற்றம் அதன் பலம்.

ஒரு சொல் எவ்வளவு எளிதில் மனதில் (Especially quotes) பதிகிறதோ அதே போல ஒரு காட்சியும் எளிமையானதாக இருப்பின் மனதில் ஒட்டிக் கொள்ளும். என் போன்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு இவை பயனளிக்கும் என நம்புகிறேன்.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started