தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் | மாரி செல்வராஜ் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
ஆசிரியர் : மாரி செல்வராஜ்
பக்கங்கள் : 200
பதிப்பகம் : வம்சி புக்ஸ்

21 சிறுகதைகளைக் கொண்ட புத்தகம். கிராமம், சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால்யம், காதல், காமம், உடல், மனம் எனப் பல பேசு பொருள்கள்.

சென்பகவள்ளி புராணம், என் தாத்தாவை நான்தான் கொன்றேன், தனிமையை கவ்வித் தின்னும் பன்றிகள் இந்த மூன்று கதைகளும் எனக்குப் பிடித்திருந்தது.

1) மிகவும் வெள்ளந்தியாய் ஒருத்தி பள்ளிக்கூடத்தில் நம் கூட படித்திருப்பாள். சென்பகவள்ளி புராணத்தைப் படிக்கையில் அவள் கட்டாயம் நம் நினைவிற்கு வந்து போவாள்.
2) படுக்கையில் இருக்கும் தாத்தாவிற்கு மருந்து வாங்கச் சென்றவன், அப்படியே சினிமாவுக்குப் போய் விடுகிறான். திரும்பி வருகையில் தாத்தா இறந்து கிடக்கிறார். இதோடு கதை முடிந்துவிடும். ஆனால் நிச்சயம் நாம் அந்தச் சிறுவனின் குற்ற உணர்ச்சி கொண்ட மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிப்பதற்கு சில வினாடிகளை எடுத்துக் கொள்வோம். 3) உணவுக்காக ஒரு பன்றியைக் கொன்று விடுவார்கள். பிறகு தான் தெரியவரும் அது சமீபத்தில் குட்டிகளை ஈன்ற தாய் பன்றி என்று. இந்தச் சம்பவம் இக்கதையின் முதன்மைக் கதாபாத்திரத்தைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கிவிடும். தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். ஆனால் சிலருடைய மனம் மட்டுமே அதனை இடித்துக் காட்டிக் கொண்டே இருக்கும். நாம் நிம்மதியின்றி  இருப்பதை ரசிக்கும். இது மனதைப் பற்றிப் பேசும் ஒரு நல்ல கதை.

சில கதாபாத்திரங்களினாலும், அதன் வசனங்களினாலும் சில கதைகள் பிடிக்காமல் போய்விட்டன. வன தெய்வம் என்ற கதை மொத்தமாக பார்க்கையில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கதை போலவே தோன்றியது.

ஒரு வாக்கியம் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் அல்லது எழுத்து வழக்கில் இருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தது போல இருக்கும் வாக்கியங்கள் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரவில்லை. பக்கத்திற்குப் பக்கம் சந்திப் பிழைகள் இருந்தன. இந்தப் புத்தகம் தொடர்ந்து விற்பனையில் இருப்பதால் இதில் உள்ள சந்திப் பிழைகள், எழுத்துப் பிழைகள் மற்றும் அச்சுப் பிழைகளை நீக்கிவிட்டு அடுத்த பதிப்பு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started