பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep3 | சங்கமித்ரா

image

📚இணைய வெளியிலும், இளம் வாசகர்கள் மத்தியிலும் பிரபலமான பதிப்பகம் அது. அவர்களது செயல்பாடும் சிறப்பாக இருந்தது. இக்காரணங்களே அப்பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளச் செய்தது. அலைபேசியில் அப்பதிப்பகத்தவரிடம் பேசும்போதே அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. புத்தகமும் அனுப்பி வைத்துவிட்டேன். ஒன்று இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை இவர்கள் நிச்சயம் வெளியிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கை. இரண்டாவது என் புத்தகத்தின் மேல் வைத்திருந்த ஓரளவு நம்பிக்கை. இந்த இரண்டு காரணங்களுமே என்னைக் காத்திருக்க வைத்தது.

📚ஒன்று இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அந்தப் பக்கம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. ஒரு follow-up-email அனுப்பியதற்குப் பிறகு ‘எங்களுக்குப் பதிப்பகத்தில் நிறைய வேலை இருக்கிறது. அதனால் காலதாமதம் ஆகலாம். நீங்கள் வேறு ஏதாவது பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்தால் தொடர்பு கொள்ளலாம்’ என ஒரு பதில் கிடைத்தது.

📚ஒன்று, ‘வெளியிட முடியாதுங்க’ என சொல்லி இருக்கலாம். ஆனால் no means no என்பது போல தெளிவான பதிலைக் கூறாமல் ரொம்பவும் vague  ஆக அவர் பேசியதால் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை. (ஒருவேளை இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்தால் அவர்களது வேலைப்பளு குறைந்த பின்பு என் புத்தகத்தை ஏறிட்டுப் பார்ப்பார்கள் போல என்ற எண்ணம் ஒரு பக்கம் வலுவாய் இருந்தது)
இரண்டாவது, அதேநேரத்தில் தொடர்ந்து அந்தப் பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டு கொண்டிருந்தது (முதல் முறையாக எனக்கு இப்படித் தோன்றியது – ஏற்கனவே நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள் போல என்று)

📚நடந்ததை தோழியிடம் கூறினேன். ‘டி, நம்ம job க்கு எப்படி apply பண்ணுவோம். எல்லா கம்பெனிக்கும் ஒரே நேரத்துல resume அனுப்பி விட்டரணும். ஒவ்வொருத்தருக்கா அனுப்பிட்டு இருந்தா விடிஞ்சுரும்’ என்றாள். இப்படி மூன்று மாத காலத்தை அநாவசியமாக தொலைத்து விட்டேனே என்று எனக்கே என் மீது கோபம் கோபமாய் வந்தது.

📚சிலர் இப்படியும் கூறுவார்கள். அதையும் இப்பதிவிலேயே குறிப்பிட்டு விடுகிறேன்.
1) அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு புத்தகத்தை வெளியிட வருடக்கணக்கில் காத்திருந்தார்கள். (இதெல்லாம் ஒரு பெருமையா? அந்தக் காலத்தில் இருந்த வசதி அவ்வளவு தான். இப்போதும் அப்படியே இருப்பது தான் நல்லது என நினைப்பவர்களுக்கு நான் கூறிக் கொள்ள விழைவது ஒன்றுதான். இது இருபத்தியோராம் நூற்றாண்டு)
2) இப்போது எல்லாம் உடனடியாக விரைவாக புத்தகம் வெளியிட நினைக்கிறார்கள். இதனால் படைப்பின் தரம் பாதிக்கப்பட்டுவிடும். (எழுதுவதற்கு எவ்வளவு வருடங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அது அந்த எழுத்தாளரைப் பொருத்தது. ஆனால் இதுதான் final draft என முடிவு செய்த பின்பு அதனை வெளியிட அதிக காலம் பிடிக்கக்கூடாது. சமையல் செய்ய நேரம் ஆகலாம். பரிமாறவும் அதே நேரம் ஆகும் என்றால் அது என்னளவில் சரியில்லை)

📚ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதிப்பகத்தார் தெளிவான பதிலைத் தெரிவிக்க வேண்டும் என போதிப்பது இப்பதிவின் நோக்கமல்ல. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இப்படி யாராவது உங்களது நேரத்தை வீணாக்கினால் காத்திருந்து காத்திருந்து காலத்தைக் கடத்தாமல் இதனை red flag ஆகக் கருதி அடுத்தக்கட்ட வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவது நன்மை பயக்கும் ஒன்றாக அமையும் என வலியுறுத்துவதே என் முதன்மை நோக்கம்.

📚உங்கள் காலத்தைச் சேமிக்க சிறந்த வழி:
1) பத்தோ இருபதோ எத்தனை பதிப்பகங்களுக்கு உங்கள் புத்தகத்தை அனுப்ப விரும்புகிறீர்களோ அந்தப் பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள். தொடர்பு எண்ணோடு.
2) வேலைக்கு விண்ணப்பிப்பது போல எல்லோரையும் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு பேசுங்கள். (இதிலும் ஒரு சிக்கலைச் சந்தித்தேன். அதனை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்)
3) எல்லா பதிப்பகங்களுக்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். (என்னைப் பொறுத்தவரை மூன்று மாத காலம்) நீங்கள் நிர்ணயித்த காலத்திற்குள் ஒரு பதிப்பகம் உங்கள் புத்தகத்தை வெளியிட ஒத்துக் கொண்டால் வாழ்த்துக்கள். இல்லையெனில் self publishing (with its own pros and cons) இருக்கிறது. கவலை வேண்டாம்.

தொடரும்…

– சங்கமித்ரா

One response to “பதிப்பகங்களும் – எனது அனுபவமும் – ep3 | சங்கமித்ரா”

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started